|
அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே!
கடந்த ஹிஜ்ரி 1430, துல்கஃதா பிறை 18 (நவம்பர் 6ம் தேதி)
வெள்ளிக்கிழமை ஜித்தா செனாயிய்யா இஸ்லாமிய
அழைப்பகத்தில், சுவனப்பாதை மாத இதழ் நடத்திய உலகளாவிய
எழுத்துப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி மற்றும்
இஸ்லாமிய மாலை அமர்வு இனிதே நடந்தேறியது, இதை
செனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம், சுவனப்பாதை மாத இதழின்
குழுமம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி (ஜித்தா) ஆகியவை
மிகவும் சிறப்பாக நடத்தி பெரும் பாராட்டையும் பெற்றது.
இந்நிகழ்ச்சிற்கு சகோ. ஹாஜா முஹ்யுத்தீன் தலைமை தாங்கி,
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், முதலாவதாக மெளலவி
இப்றாஹீம் மதனி அவர்கள், தஃவாவில் பெண்களின் பங்கு
என்ற தலைப்பில் ஆற்றிய உரை பெண்களுக்கு மிகவும்
பயனுள்ளதாக அமைந்தது, இஸ்லாத்திற்காக நாமும் இப்பணியை
செய்து வெற்றி பெற வேணடும் என்ற ஆர்வம் ஒவ்வொருவரின்
மனதிலும் பதிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக யான்பு மாநகரத்திலிருந்து வருகை தந்திருந்த
டாக்டர் அஹ்மது பாகவி P.hd., அவர்கள் குர்ஆனும்
இலக்கியமும் என்ற தலைப்பில் ஆற்றிய உரை மிகவும்
அற்புதம், குர்ஆனில் உள்ள இலக்கியங்களை ஒன்றன்பின்
ஒன்றாக அவர் விளக்கியது, வருகை தந்தோரை ஆச்சரியத்தில்
ஆழ்த்தியது. அவ்வுரையின் முடிவாக மஃரிப் தொழுகையின்
அதான் சொல்லப்பட்டது அத்துடன் முதலாவது அமர்வு
முடிந்து மக்கள் தொழுகைக்கு சென்றனர்.
தொழுகைக்குப்பின் முதலாவதாக சகோ. முஃப்தி அவர்கள்
கட்டுரை போட்டியில் தேர்ச்சி பெற்றவர்களை எப்படி, எந்த
முறையில் தேர்வு செய்யப்பட்டது என்பதை மிகவும் தெளிவாக
விளக்கமளித்தார். அது கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு
பரிசு பெறாதவர்களுக்கு ஆறுதலாகவும், பரிசு
பெற்றவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வண்ணமும்
அவருடைய சிற்றுரை அமைந்தது.
அடுத்ததாக சகோ. சாதிக் சிக்கந்தர் அவர்கள் சுவனப்பாதை
அன்றும், இன்றும் என்ற தலைப்பில் சிற்றுரை ஆற்றினார்.
அன்று ஹிஜ்ரி 1425 ஷவ்வால் மாதம் ஆரம்பித்து, கடந்த 5
வருடங்களாக பல்வேறு கட்டுரைகளையும், பல்வேறு
விஷயங்களையும் தாங்கி இன்றும் சிறந்து விளங்குவதையும்
இது என்றும் சிறந்திட மக்களின் ஆதரவு தேவை என்பதை
சுட்டிக்காட்டினார்,
அதன்பின் சகோ. அக்பர் பாட்ஷா அவர்கள் சுவனப்பாதை மாத
இதழுக்கு மதிப்புரை வழங்கினார், அவரின் உரை
சுவனப்பாதைக்கு பொன்னாடை போர்த்தியது போன்று அமைந்தது,
மற்ற பத்திரிகைகளையும் சுவனப்பாதையையும் ஒப்பிட்டு
பார்க்கையில் இதன் வளர்ச்சி மேலோங்கி நிற்கிறது என்றும்,
ஆரம்பம் முதல் இன்று வரையுள்ள பத்திரிகைகளை ஒன்று
சேர்த்து ஒரே தொகுப்பாக வெளியிட்டால் நல்லது என்று
கூறியது அவருடைய உரையில் மிகவும் முக்கிய அம்சம்,
உரையின் சார்பாகவே, பத்திரிகையின் வடிவமைப்பு, அதில்
வந்த முக்கிய கட்டுரைகள், குறுக்கெழுத்துப் போட்டி,
நபி(ஸல்) அவர்கள் வழியில் நம் ஹஜ்ஜின் வெளியீடு,
சுவனப்பாதை வெளியிட்ட கையடக்க துஃஆ புத்தகம் போன்றவற்றை
Power point மூலமாக காட்டப்பட்டது.
இதை தொடர்ந்து எல்லோராலும் எதிர்பாத்திருந்த பரிசளிப்பு
நிகழ்ச்சி நடைப்பெற்றது, இப்பரிசளிப்பு நிகழ்ச்சியை
சிறப்பித்து தருவதற்காக ஜித்தா செனாயிய்யா
அழைப்பகத்தில் பணிபுரியும் ஷேஃக் மன்சூர் ஜான் (Public
Relation Officer), ஷேஃக் முஹம்மத் பாபக்கர், ஷேக் அலி
அத்தா ஆகியோர் வருகை தந்திருந்தார்கள். முதலில் ஷேஃக்
மன்சூர் ஜான் எல்லோருக்கும் நன்றி கூறியும் பரிசு
பெற்றவர்களை வாழ்த்தியும் அரபி மொழியில் சிற்றுரை
நிகழ்த்தினார் அதை மௌலவி இப்ராஹீம் மதனி அவர்கள்
தமிழில் மொழி பெயர்த்தார்கள்.
இதை தொடர்ந்து 13 ஆறுதல் பரிசுகளை, சகோ. அக்பர் பாட்ஷா,
டாக்டர், அஹ்மது பாகவி மற்றும் சுவனப்பாதை குழுவினரால்
வழங்கப்பட்டது, மேலும் மீதமுள்ள மூன்றாம், இரண்டாம்,
முதலாம் பரிசுகளை ஜித்தா செனாயிய்யா சென்டரில் பணி
புரியும் ஷேஃக் மன்சூர் ஜான், ஷேஃக் முஹம்மத் பாபக்கர்,
ஷேக் அலி அத்தா ஆகியோரால் வழங்கப்பட்டது.
அத்துடன் இஷா அதான் கொடுக்கப்பட்டதும் நிகழ்ச்சி நிரல்
இனிதே முடிக்கப்பட்டது, இஷா தொழுகைக்குப்பின் இரவு
உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, நிகழ்ச்சிற்கு
வந்திருந்த நண்பர்கள், பெரியோர்கள், குழந்தைகள் மற்றும்
தாய்மார்கள் உணவு உண்டு மகிழ்ந்து இனிதே சென்றனர்,
எல்லா புகழும் இறைவனுக்கே!
- நாஞ்சிலார்
|