ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

–  மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ :

இஸ்லாம் காட்டிய அனைத்து சட்டங்களும் மனிதனின் ஈருலக வெற்றிற்குக் காரணமாகும் என்பதில் ஐய்யமில்லை. அந்த தூய சட்டங்களில் ஒன்றுதான் அன்னிய பெண்ணுடன் தனிமையில் இருப்பதற்கு இஸ்லாம் விதித்த தடையாகும். அதுவும் சகோதரரின் மனைவியுடன் இருப்பது பெரும் ஆபத்து என்றார்கள் இறுதித் தூதர் நபி(ஸல்)அவர்கள். இதுபோன்ற சட்டத்தை பார்த்து கேலி செய்பவர்களும், கவனக்குறைவாக இருப்பவர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

இதுபற்றிய பொன் மொழிகள்:

உங்களில் எந்த ஆணாவது அன்னிய பெண்ணுடன் அந்தப் பெண்ணின் மஹ்ரம் இல்லாமல் அந்தப் பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.     ஆதாரம்: புகாரி

உங்களில் எந்த ஆணாவது அன்னிய பெண்ணுடன் தனிமையில் இருக்கக்கூடாது என மூன்று முறை
நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, (அப்படி இருந்தால்) மூன்றாவதாக ஷைய்த்தான் இருப்பான் என்றார்கள். (சுனுன் நஸாயி அல்குப்ரா)

(அன்னிய) பெண்கள் உள்ள இடத்திற்கு நீங்கள் செல்வதை விட்டும் உங்களுக்கு நான் எச்சரிக்கை செய்கின்றேன் என நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, ஒரு அன்சாரி நபித்தோழர், அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணுடைய கணவரின் சகோதரன், அந்தப் பெண்ணிடம் செல்வது பற்றி, நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் எனக் கேட்டார். கணவரின் சகோதரர் மிகவும் ஆபத்து எனக் கூறினார்கள்.   ஆதாரம்: புகாரி

அதாவது, ஒரு அன்னிய பெண்ணுடன் எந்த ஒரு ஆணும் தனிமையில் இருப்பதை இஸ்லாம் முற்றாகத் தடுத்திருக்கின்றது. அந்த ஆண் யாராக இருந்தாலும் சரியே! அவர் ஆசிரியராக இருக்கலாம் அல்லது ஒரு ஆத்மீகத் தலைவராகவும் இருக்கலாம், அனைவருக்கும் சட்டம் ஒன்றுதான். இதை மீறிச் செயல்படும் போது மூன்றாவது அங்கே ஷைய்த்தான் இருப்பான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அதாவது தவறு நடப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது, இன்று இல்லாவிட்டாலும் நாளை நடைபெறும். எந்த விஷயத்திலும் வருமுன் காப்பவவையாகவே இஸ்லாமிய சட்டங்கள் அமைந்திருக்கும், இதற்கு எத்தனையோ நடந்து முடிந்த சம்பவங்கள் சான்றாக இருக்கின்றது.) மதத் தலைவர்களாகவும், ஆத்மீகத்தின் தந்தைகளாகவும்? வர்ணிக்கப்படும் எத்தனையோ ஏமாற்றுப் பேர்வழிகளின் ஈனச் செயல்கள் இந்த விஷயத்தில் நாரிப்போய் கிடக்கிறது. நாள் தோறும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது. வராமல் புதைந்து கிடக்கும் செய்திகள் எத்தனையோ! வல்லரசு நாடுகளின் தலைவர்களிலிருந்து ஆரம்பித்து நமது நாடுகளிலும் பிரேமானந்தா, டாக்டர் பிரகாஷையும் தான்டி இந்த வாரம் சென்னையில் 62 வயது வாலிபன்? தனது வீட்டில் பணிபுரிந்த 21 வயது இளம்பெண்ணை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலமுறை கற்பழித்த ஈனச் செயலால் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றார் என்கிற செய்திகளெல்லாம் நம் தலைப்பிற்கு போதிய சான்றல்லவா? பெண் என்றால் அவள் பெண்தான். ஆண் என்றால் அவன் ஆண் தான் என்பதை இதன் பிறகாவது நம்புங்கள். அதிலும் கணவரின் சகோதரன், தன் சகோதரனின் மனைவியுடன் தனிமையில் இருக்கும் போது தவறு நடப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கின்றது. உதாரணத்திற்கு, ஒரு பெண்ணிடம் அவளுடைய குடும்பத்தைச் சேராத ஒரு ஆண் சென்றால், பலரும் அதைப்பார்த்து சந்தேகம் கொள்வார்கள், அவர் செல்வதை நோட்டமிடவும் செய்வார்கள். ஆனால் அந்த வீட்டுக்காரரின் சகோதரர் அவரின் மனைவி தனிமையில் இருக்கும் போது சென்றால், அதைப்பற்றி யாரும், சந்தேக கண்கொண்டு பார்ப்பதில்லை, காரணம் அவர் அவருடைய சகோதரரின் வீட்டுக்குச் செல்கின்றார் என்றே நினைப்பார்கள். இச்சட்டத்தை நமது நாடுகளில் அதிகமானவர்கள் பின்பற்றுவதில்லை, இதனால் பல தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு 18.02.2008 அன்று இன்டர் நெட்டில் பரபரப்பு என்னும் பத்திரிக்கையில் வெளிவந்த பரபரப்பான செய்தி  சான்றாக இருக்கின்றது. அந்தச் செய்தி இதோ.

கொடுங்கையூரில் கர்ப்பிணிப் பெண் கற்பழித்து கொலை – கணவர் தம்பியின் காமவெறி” : பிராட்வேயில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குழாய் விற்பனை நிறுவனத்தில் மானேஜராக இருப்பவர் ராம்குமார். வேலூர் பாலாஜி தெருவைச் சேர்ந்த இவருக்கும் சேலம் செவ்வாய்ப் பேட்டையைச் சேர்ந்த ஞானசேகர் மகள் ஜெயஸ்ரீ என்ற சுஜாதா (வயது 27)வுக்கும் கடந்த ஜுன் மாதம் திருமணம் நடந்தது. ஜெயஸ்ரீ எம்.பி.ஏ. பட்டதாரி.
திருமணத்துக்குப் பிறகு ராம்குமார்-ஜெயஸ்ரீ இரு வரும் கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனியில் 3-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினார்கள். வீட்டின் கீழ்தளத்தில் வீட்டு உரிமையாளரும், மேல் தளத்தில் புதுமண ஜோடியும் வசித்து வந்தனர். ஜெயஸ்ரீ 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். ராம்குமாரின் தம்பி கண்ணன் (வயது 26), 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் வேலூரில் வேலை எதுவும் செய்யாமல் சுற்றியபடி இருந்தார். இதனால் வேலை தேடி சென்னை வந்தார்.
அண்ணன் ராம்குமார் வீட்டில் தங்கிய அவர், அண்ணனின் நிறுவனத்திலேயே வேலைக்கு சேர்ந்தார். அங்கு எடுபிடி வேலைகள் பார்த்து வந்தார். ஜெயஸ்ரீ எல்லோரிடமும் சகஜமாக பேசும் சுபாவம் கொண்டவர். கணவரின் தம்பி என்ற முறையில் கண்ணனிடமும் அவர் சகஜமாக பழகி வந்தார். ஆனால் வயது கோளாறில் கண்ணன் மனதில் காம இச்சை தலை தூக்கியது.
கடந்த வாரம் வியாழக்கிழமை ராம்குமார் பெங்களூர் புறப்பட்டு சென்றார். வீட்டில் ஜெயஸ்ரீயும், கண்ணனும் இருந்தனர்.
ஏற்கனவே ஜெயஸ்ரீயை காமப்பார்வை பார்த்து வந்த கண்ணன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள தீர்மானித்தார். நேற்றிரவு அவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார் ஜெயஸ்ரீயிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்தார். அதிர்ச்சி அடைந்த ஜெயஸ்ரீ, கண்ணனை கண்டித்தார். கண்ணன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜெயஸ்ரீயை பலாத்காரம் செய்தார். அவருடன் ஜெயஸ்ரீ நீண்ட நேரம் போராடிப் பார்த்தார். “கர்ப்பிணியாக இருக்கிறேன்” என்று கெஞ்சி அழுதார். அவர் சத்தம் வெளியில் கேட்டு விடக்கூடாது என்பதற்காக டி.வி. சத்தத்தை அதிகமாக வைத்தபடி கண்ணன், ஜெயஸ்ரீயின் கற்பை சூறையாடினார். அவரது வெறிச் செயலால் ஜெயஸ்ரீ போராடி நிலை குலைந்து போனார்.
அவர் பிடியில் இருந்து தப்பிய ஜெயஸ்ரீ படுக்கை அறையில் இருந்து ஹாலுக்கு ஓடினார். அவர் சத்தம் போட்டு தன்னைக் காட்டிக் கொடுக்கத்தான் ஓடுகிறார் என்று பயந்து போன கண்ணன், ஜெயஸ்ரீயை பிடித்து தலையணையால் முகத்தை அழுத்தி கொல்ல முயன்றார் முடியவில்லை. அங்கு கிடந்த கத்தியை எடுத்து ஜெயஸ்ரீயின் வயிற்றில் ஓங்கிக் குத்தினார். அந்த கத்தி ஜெயஸ்ரீயின் வயிற்றில் பாய்ந்து உடலை கிழித்துக் கொண்டு வெளியில் வந்தது. அந்த கத்தியை கண்ணன் உருவ முயன்றார். ஆழமாக பாய்ந்ததால் அவரால் கத்தியை வெளியில் எடுக்க முடிய வில்லை. ரத்தம் கொப்பளிக்க அலறித் துடித்த ஜெயஸ்ரீ ஹாலில் விழுந்தார். நிமிடங்களில் அவர் உயிர் பிரிந்தது.
சில மணி நேரம் கழித்தே கண்ணனுக்கு தான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்ற உணர்வு வந்தது. அண்ணியை அநியாயமாகக் கொன்று விட்டோமே என்று கண்ணீர் விட்டபடி, தலையில் கையை வைத்துக் கொண்டு வீட்டு வாசலில் உட்கார்ந்து விட்டார். இதற்கிடையே வீட்டு உரிமையாளர் மகள் மாடியில் இருந்து டி.வி.சத்தம் அதிகமாக கேட்டதால் ஜெயஸ்ரீயைப் பார்க்க மாடிக்கு சென்றார். வாசலில் தலையில் கை வைத்தப்படி உட்கார்ந்திருந்த கண்ணனிடம் “ஜெயஸ்ரீ எங்கே” என்று கேட்டார். அதற்கு கண்ணன் “அண்ணிக்கு ஏதோ ஆகிவிட்டது” என்று கண்ணீர் மல்க கூறினார்.
வீட்டு உரிமையாளர் மகள், அறைக்குள் எட்டி பார்த்தார். ஹாலுக்குள் குத்தப்பட்ட கத்தியுடன் ஜெயஸ்ரீ பிணமாகக் கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அலறியபடி கீழே இறங்கினார்.
உடனடியாக அவர் “அவசர போலீஸ் எண்-100”க்கு போனில் தொடர்பு கொண்டார். தங்கள் வீட்டு மாடியில் வசித்த பெண் கத்தியால் குத்தப்பட்டு பிணமாக கிடக்கும் தகவலை கூறினார். இதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறை போலீசார் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு உதவி போலீஸ் கமிஷனர் ஜெயக்குமார், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் சென்றனர். ஜெயஸ்ரீ பிணமாக கிடந்த வீட்டுக்குள் சோதனை நடத்தினார்கள். பிறகு கண்ணனிடம் “ஜெயஸ்ரீயை கொலை செய்தது யார்” என்று கேட்டனர். அதற்கு கண்ணன், “அண்ணி காலை 3 மணிக்கு வீட்டு முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்ம மனிதன் தாலி செயினை பறித்து கொண்டு அவரை முதுகில் கத்தியால் குத்தி விட்டு ஓடி விட்டான்” என்றார். ஆனால் போலீசார் அதை நம்ப வில்லை.
வீட்டுக்குள் ஜெயஸ்ரீ அங்கும்-இங்குமாக ஓடி போராடியதற்கான அடையாளங்களை காட்டி போலீசார் விசாரித்தனர். அப்போதும் கண்ணன் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார். கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டதும் போலீசாரிடம் கண்ணன் எல்லா உண்மைகளையும் ஒத்துக் கொண்டார். உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயஸ்ரீயை, கண்ணன் கற்பழித்ததற்கான ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர். கண்ணனின் உள்ளாடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஜெயஸ்ரீ உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளது. பெங்களூர் சென்று உள்ள ராம்குமார் மற்றும் ஜெயஸ்ரீயின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். நன்றி: பரபரப்பு (18.02.2008)

1400 ஆண்டுகளுக்கு முன் நபி(ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழியின் ஆழமான கருத்தை தெரிந்து கொண்டீர்களா? ஆகவே நபி(ஸல்) அவர்களின் ஒவ்வொரு பொன்மொழிகளையும் அடிதவறாது பின்பற்றுவோம். ஈருலக வெற்றி பெறுவோம்.

Leave a Reply

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்