ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

– அப்துல் காதர் :

 ஈமான் கொண்ட விசுவாசிகளே! உங்களிடத்தில் ஒரு தீயவன் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதனை விசாரித்து தெளிவு செய்து கொள்ளுங்கள். இல்லையேல், அறியாமையால் ஒரு கூட்டத்தார் மீது அநீதி இழைத்து விடுவீர்கள். பின்னர் அது குறித்து வருத்தப்படுவோராகவும் ஆகிவிடுவீர்கள். (அல்குர்ஆன் – அல்ஹுஜராத் : 6)

நாம் வாழும் இந்த காலக்கட்டமானது, விண்கோள்கள் மட்டுமல்லாமல், செயற்கைக் கோள்களும் வானில் வலம் வரும் விஞ்ஞான யுகம். உலகமே உள்ளங்கையில் சுருக்கப்பட்டுவிட்டதோ எனக் கருதும் அளவிற்கு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளவர்களிடம் கூட, பக்கத்து அறையிலுள்ளவர்களிடம் உரையாடுவது போல் பேச, பார்க்க முடியுமான அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட காலம்.

ஏனைய துறைகளைப் போலவே, இதழியல் துறையிலும் வியத்தகு மாறுதல்களைக் கொண்டுவந்துள்ளது. பத்திரிக்கைகளின் முழு முதற் பயனான தகவல் தொடர்பை பொறுத்தவரை இன்று பல்வேறு பரிணாம வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

அச்சு ஊடகம் (Printing) பின்னர் காட்சி ஊடகம் (Television) இணையம் (Internet) அலை(பேசி) ஊடகமாக (Mobile Phone SMS/MMS) உருப்பெற்று வந்தாலும், இன்றும் கூட பத்திரிக்கைகளுக்கான ஆர்வம் எங்கும் குறைந்துவிடவில்லை. ஒருவேளை, தொலைக்காட்சியில் வாசிக்கப்படும் செய்திகளைப் போலல்லாமல், ஆற அமர நிதானமாக படித்துக்கொள்ள வாய்ப்பாக உள்ளதால் எத்தனை விதமான செய்தி திரட்டுகள் (Television / Internet / MMS / SMS) வந்தாலும் பத்திரிக்கை வாசிப்பதை பலரும் விரும்புகிறவர்களாக இருக்கலாம்.

கடந்த 5 வருடங்களில் எடுக்கப்பட்ட ஒரு சர்வே, பத்திரிக்கை வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை, கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது. அதாவது கடந்த 5 வருடங்களில் கல்வி கற்போரின் எண்ணிக்கை 15 சதவிகிதம் அதிகரித்துள்ள அதே வேளையில், வாசகர்களின் எண்ணிக்கை 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படி நாளுக்கு நாள் பெருகிவரும் வாசகர் வட்டமும், பணிகளை எளிதாக்கும் விஞ்ஞான வளர்ச்சியும் கொண்ட பத்திரிக்கை துறையில் நமது சமூகத்தவரின் பங்களிப்பு எந்த அளவில் உள்ளது.

இக்கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அல்குர்ஆன் வசனம் பத்திரிக்கைத் துறையின் அடிப்படைகளை தெளிவாக எடுத்தியம்புகிறது. இன்னும் சொல்வதானால், நபி(ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரமாகத் திகழும் ஹதீஸ்களை தரம் பிரித்து இனம் காண இமாம்களைத் தூண்டியதே இவ்வசனம்தான் என ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக பத்திரிக்கைகள் அன்றாட நாட்டு நடப்புகளை எடுத்துக் கூறுபவையாக உள்ளன. நேற்றைய நிகழ்வு, இன்றைய செய்தியாகி நாளை வரலாறாகிறது. இப்படியான செய்திகள் மட்டுமல்லாமல், பல அறிவிப்புகளைத் தரும் தகவல் பலகையாகவும் பத்திரிக்கைகள் விளங்குகின்றன.

வேலைவாய்ப்புச் செய்திகள், விளம்பரங்கள், திருமணத் தேடல்கள், அரசு அறிவிப்புகள், அரசின் திட்டங்கள், பங்கு வர்த்தகம் என பல தகவல்களை தரக்கூடியவைகளாக நாளிதழ்கள் விளங்குகின்றன.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இதழியல் துறையில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு அறவே இல்லையென ஒதுக்கி விடமுடியாது. ஒரு நூற்றாண்டு காலமாகவே முஸ்லிம்களும் இத்துறையில் தங்களை ஈடுபடுத்தியே வந்துள்ளனர். ஆனால் அவை பெரும்பாலும், பருவ இதழ்கள் என்றழைக்கப்படும் வார, மாத, மாதமிருமுறை இதழ்களாகவே வெளிவந்துள்ளன.

விதிவிலக்காக 1987 ஆம் ஆண்டு முதல் வெளியான மணிச்சுடர் நாளிதழும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பத்திரிக்கையாகத்தான் வெளிவந்ததே அல்லாமல், வெகுஜன நாளிதழ்களாகவோ, குறைந்தபட்சம் முஸ்லிம்கள் அனைவருக்குமான நாளிதழ்களாகவோ அது அமையவில்லை.

இன்று, முஸ்லிம்களால் வெளியிடப்படும் வார, மாத, மாதமிருமுறை இதழ்களும், முஸ்லிம் பெண்களுக்காகவோ அல்லது கட்சி, இயக்க இதழ்களாகவோதான் வெளியாகின்றன. அத்தி பூத்தார் போல் வெகு ஜன வரவேற்பை பெறும் ‘ஒற்றுமை’ போன்ற இதழ்கள் நம்மிடையே உள்ள ஒற்றுமையின்மையால் நிறுத்தப்பட்டுவிடுகின்றன. ‘சமரசம்’ கூட மிகக் குறுகிய அளவில்தான் மக்களிடம் சென்றடைகிறது. ஏதோ ஒரு வகையில் இயக்க சார்பானவைகளாக இருப்பதால் குறுகிய வட்டத்திலேயே நின்று விடுகின்றன.

கிட்டத்தட்ட முஸ்லீம்களுக்காக, முஸ்லீம்களால் நடத்தப்படும் நாளிதழ் எதுவுமில்லாத காரணத்தினாலும், இயக்கம் சாராத பொதுமக்களை இணைக்கக்கூடிய பொதுவான ஒன்றாக ஒரு நாளிதழ் இருக்க முடியுமென்ற காரணத்தாலும் நமக்கென ஒரு தனி நாளிதழ் அவசியம் தேவை என்றாகிறது.

அடுத்ததாக, பத்திரிக்கை செயல்பாடு குறித்து அறிஞர் ஃபிராங்க் மோரீஸ் கூறிய ஒரு கருத்து கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

‘ஒரு பத்திரிக்கைக்கு பிரசுரத்திற்குரியதை தெரிவு செய்வதில் உரிமை உண்டு. ஆனால் உண்மைகளைத் திரிப்பதற்கு அறவே உரிமையில்லை’ என்று குறிப்பிடுகிறார்.

அவருடைய குறிப்பிலுள்ள இரு பகுதிகளிலுமே இன்று நமது சமுதாயம் வஞ்சிக்கப்பட்டு வருவது கண்கூடு. பிரசுரத்திற்குறியதாக பத்திரிக்கைகள் இன்று தெரிவுசெய்வதில் பெரும்பாலானவை எங்கோ, கண்காணாத இடத்தில் இஸ்லாத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் நடக்கும் முஸ்லிம்களின் செயல்பாடுகள் ஷாபானு முதல் இம்ரானா வரை இப்படியான உதாரணங்களை அடுக்கலாம். இவற்றின் மூலம் இஸ்லாத்தை விமர்சனம் செய்வதற்கே அனைத்து ஊடகங்களும் போட்டி போடுகின்றன.

அதே போல், அறிஞர் ஃபிராங்கின் கருத்தின் பிற்பகுதியும் தமக்கு அறவே உரிமையில்லாத உண்மைகளைத் திரிக்கும் வேலையை இன்றைய நாளிதழ்கள் திறம்படச் செய்து வருகின்றன என்பதும் நாம் அறிந்ததே.

கோத்ரா ரயில் விபத்தாக இருந்தாலும், கோவை குண்டு வெடிப்பாக இருந்தாலும், காஷ்மீரில் கோவில்கள் இடிக்கப்பட்டன என்று வெளியிட்டதாகட்டும் இப்படி எண்ணற்ற விஷயங்களில் நாளிதழ்கள் எவ்வாறு நடந்து கொண்டன? இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உடனடியாக உண்மை நிலவரங்களை நமது சமுதாயம் அறிந்து கொள்ள வாய்ப்பே இருப்பதில்லை. எல்லாவிதமான கேடுகளும் நடந்து முடிந்தபின்தான் சாவகாசமாக புலன் விசாரணை செய்து அல்லது அதையும் பிற ஊடகங்களிலிருந்து எடுத்து மறுபிரசுரம் செய்பவைகளாகத்தான் நமது பருவ இதழ்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு நாளும் நடைபெறும் பல்வேறு பரபரப்பு செய்திகளுக்கு நடுவே சில வேளை இத்தகைய புலனாய்வுகள் முக்கியத்துவம் பெறாமலே போய்விடும் அவலமும் ஏற்படுகின்றது. நமக்கென ஒரு தனி நாளிதழ் இருக்கும் பட்சத்தில் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்பதனால் நமக்கென ஒரு தனி நாளிதழ் அவசியமாகின்றது.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிற்கு சகோதரனாவான் என்பது நபிமொழி. சொந்த சகோதரனின் நலனைப் பேணுவது போலவே இஸ்லாமிய சகோதரனின் நலனைப் பேணுவதும் நம் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். ஆனால் நமது சகோதரர்கள் குவாண்டானாமோ சிறையில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதையும், யூத, கிருத்துவ, பார்ப்பனர்களால் நடத்தப்படும் ஊடகங்கள் வாயிலாகத்தானே அறிய முடிந்தது.

இச்செய்திகள் கூட எந்த அளவிற்கு முழுமையானது என்பது சந்தேகத்திற்குரியது. ஏனெனில், இஸ்லாமியர் சம்மந்தப்பட்ட குற்ற செயல்களை மிகைப்படுத்துவதிலும், முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டும் காணாமல் விட்டுவிடுவதும் தானே அவர்களது இயல்பு.

நமக்கு அருகிலுள்ள கோவை சிறையில் நடந்த மனித உரிமை மீறல்கள் இப்படித்தானே உலகிற்குக் கிடைக்காமல் இருட்டடிப்பு செய்யப்பட்டன. இவற்றுக்கான தீர்வு நமக்கென நடுநிலையான ஒரு நாளிதழ் என்பதாகத்தானே இருக்க முடியும்.

இன்று முஸ்லிம் இளைஞர்களுக்கான, பெண்களுக்கான வார, மாத இதழ்கள் வெளிவந்துகொண்டிருந்தாலும், சிறுவர் இலக்கியத்தில் தேக்க நிலை உள்ளது. சிறுவர் சிறுமிகளுக்கென்று எந்த ஒரு வெளியீடும் இல்லாத நிலையில், சிறுவர் மலர் வெளியிடும் சில நாளிதழ்களின் வாசகர்களாக பலர் உள்ளனர். சிறுவர்கள் படித்துக் கிழித்த பின், ஓய்வாக அதனை புரட்டிப் பார்க்கும் பெற்றோர்கள் அதிர்ந்து போகும் அளவிற்கு அதிலே இஸ்லாமிய விரோத கருத்துக்கள் இடம் பெறுவதைக் காண முடிகின்றது. (உதாரணம் : தினத்தந்தி மற்றும் தினமலர் வெளியிடும் சிறுவர் மலர்)

ஒரு முறை, புகழ்பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் அஹமத் தீதாத்(ரஹ்) அவர்கள் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட தான் பங்குபெறும் ஒரு இஸ்லாமிய கருத்தரங்கிற்கு விளம்பரம் செய்ய ‘லண்டன் டைம்ஸ்’ நாளிதழை அணுகியபோது அதனை அந்நாளிதழ் மறுத்தது. இப்பொழுது கூட இவ்வகை புறக்கணிப்புகள் நடந்து கொண்டுதான் உள்ளன.

அதே போலவே, அல்லாஹ்வின் பேரருளால் இன்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் இஸ்லாமிய சொற்பொழிவுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. ஆனால் எங்கு என்ன நிகழ்ச்சி நடைபெறும் என்ற தகவல் நாம் வாங்கும் பத்திரிக்கைகளில் கிடைக்காது. மாறாக குடமுழுக்கு, கும்பாபிஷேகம், உபயன்யாச விபரங்களும் தான் நமக்குக் கிடைக்கும். நமக்கென ஒரு தனி நாளிதழ் மூலமாக நாம் இத்தகைய அறிவிப்புகளைப் பெறலாம்.

அதேபோல்தான், மனிதனுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய பல தீமைகளும் அன்றாடம் நாம் வாசிக்கும் பத்திரிக்கைகள் ஊடாகவே ஏற்படுகின்றன. ஆபாச படங்களில்லாமல், விரசமான பாலியல், முறைகேடான செய்திகள் இல்லாமல் சினிமா விளம்பரங்கள் இல்லாமல் நாளிதழ்கள் இல்லை என்ற சூழல் நிலவுகின்றது. முகம் சுழிக்காமல், நாம் வாசிக்க வேண்டுமானால் நமக்கென ஒரு தனி நாளிதழ் அவசியம் வேண்டும்தான்.

பத்திரிக்கை, ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படுகிறது. அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்குவதாலும், மக்களின் குறைகளை அரசுக்கு சுட்டிக்காட்டுவதாலும் இரு சாராருக்குமிடையில் பாலமாக கருதப்படுகிறது. சுதேசமித்ரன் காலம் முதல் இன்று வரை மக்களின் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தும் சக்தி வாய்ந்த ஊடகமாக கணிக்கப்படுகிறது. நமக்கென ஒரு தனி நாளிதழ் இல்லாமல் நாம் மேற்குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும் இழந்தவர்களாகின்றோம்.

இன்று நம் மத்தியில் நல்ல பல ஊடகவியலர்கள் உள்ளனர். அனுபவம் வாய்ந்த மூத்த பத்திரிக்கையாளர் மட்டுமல்லாமல் எண்ணற்ற இளம் இதழியலாளர்களும் நம்மிடம் உள்ளனர்.

தொழில்நுட்ப வசதியாலும், வாசகர்களின் வரவேற்பாலும், விலாசமாகிவிட்ட விளம்பர களமாகவும் உள்ள பத்திரிக்கைத் துறை பலருக்கு வேலை வாய்ப்பளிக்கும் இலாபகரமான தொழிலாக உருவாகியுள்ள இவ்வேளையை நம் சமுதாய தொழிலதிபர்கள் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

இவ்வாறாக இரு சாராரும் இணைந்து நமக்கென ஒரு தனி நாளிதழை அவசரமாக காலம் தாழ்த்தாமல் வெளிக்கொண்டு வருவார்களேயானால், மிகுந்த மன வேதனையோடு நம்மை இழித்தும், இருட்டடிப்பு செய்தும் வெளியாகும் பத்திரிக்கையின் வாசகர்களாக உள்ள அனேகர் விடுதலை பெறுவார்கள்.

மார்க்க சம்மந்தமான மற்றும் இயக்க சம்மந்தமான விஷயங்களுக்கு பருவ இதழ்களையும், அன்றாட பொதுவான செய்திகளுக்கு நமக்கென வெளியாகும் நாளிதழையும் தெரிவு செய்ய முன்வருவார்கள்.

இதன் மூலம் குறைந்தபட்சம் கட்சி மற்றும் இயக்க வேறுபாடுகளை மறந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒரே திசை நோக்கி பயணிக்க முடியும். அநீதியையும், தீமைகளையும் வெறுக்கும் அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்லவும் முடியும்.

வேறு எந்த காரணங்களுக்காக இல்லாவிட்டாலும், சமுதாய ஒற்றுமைக்காகவாவது நமக்கென ஒரு தனி நாளிதழ் அவசியமாகும், கூடவே அவசரமுமாகும்.

(சுவனப்பாதை மாதஇதழ் நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை)

Leave a Reply

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்