ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

– M. ஜமீலா B.A.,

நாம் வாழக்கூடிய இந்த நவீன கம்யூட்டர் உலகில் மனிதன் விண்ணைமுட்டுமளவு முன்னேறி உள்ளான். இதற்கு மேலும் ஒரு முன்னேற்றம் உண்டா என நினைக்கும் அளவிலுள்ள அசுர வளர்ச்சிதான் இது. 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த காலத்தையும், இக்காலத்தையும் எடுத்துக் கொண்டால் மலைக்கும், மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருப்பதை எவரும் மறுக்க இயலாது. இந்த அளவிற்கு அறிவை பயன்படுத்தி எல்லா துறையிலும் முன்னேறிய மனிதனின் இன்னொரு பக்கத்தை புரட்டி பார்த்தால் அவன் அதாள பாதாளத்தில் விழுந்து கொண்டிருப்பதை பார்க்கலாம். ஒழுக்கம், நேர்மை, கட்டுப்பாடு போன்ற நற்பண்புகள் இல்லாமல் மிருகத்தைவிட கேவலமாக தன் மனம் எப்படியெல்லாம் வாழ விரும்புகிறதோ அதற்கு கட்டுபட்டு, மயங்கி, அடிமையாகி அதன்படி வாழ்ந்து அவனுடைய தனிப்பட்ட வாழ்வில் விழ்ச்சி அடைந்துள்ளான். இக்காலத்தில் இந்தளவிற்கு ஒரு பக்கம் முன்னேறிக் கொண்டு இருக்கும் மனிதன் ஏன் மற்றொரு பக்கத்தில் இவ்வாறு வீழ்ச்சி அடைந்தான்? 

நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன – ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் – இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். (குர்ஆன் 7: 179)

ஐம்புலன்களை கொண்டு செயல்படாத மனிதனை கால்நடையைவிட மோசமானவர்கள் என்று கூறுகிறான் இறைவன், இப்படிப்பட்ட சமுதாயத்தைதான் நாம் இன்று காண்கிறோம். ஒழுக்கம் இல்லாமல் எல்லா வகையிலும் வீழ்ச்சி அடைந்துள்ளான். உணவு, உடை, வீடு இதுதான் வாழ்க்கை இதற்கு மேல் ஒரு நோக்கமோ, இலட்சியமோ, குறிக்கோள்களோ இல்லாமல் தன்னுடைய உலக சுகத்தை மட்டும் கருத்தில் கொண்டு பிறருடைய நலன் பாதிக்கப்பட்டாலும் சரி பிறரென்ன ஒட்டு மொத்த சமுதாயம் பாதிப்படைந்தாலும் சரி, தான் மட்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

ஆனால் இறைவன் மனிதனை படைத்து அவன் மனிதனாக வாழ்வதற்கு தன்னுடைய இறைவசனங்கள் மற்றும் நபிவழியின் மூலமும் சொல்லி காட்டியுள்ளான். தான் எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டுள்ளோம் என்ற நோக்கத்தையே சரிவர புரிந்து கொள்ளாமல் இன்றைய இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் ஒழுக்கத்தில் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள் இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்-குர்ஆன் 51: 56)

இதனை நாம் ஒற்றை வரியில் கூறிவிடலாம் ஆனால் இறைவனை வணங்குவது என்றால் என்ன? என்று சரிவர புரிந்து கொள்ளவில்லை வணக்கம் என்றால் 24 மணி நேரமும் தஸ்பிஹ் மணியை உருட்டி கொண்டோ, தொழுது கொண்டோ, நோன்பு நோற்றோ அல்லது இன்ன பிற வணக்கங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று அர்த்தமா? அல்லது இந்த உலகம் என்னை கெடுத்து விடும் என்று அஞ்சி காடு, மேடு என துறவறம் போவது என்றர்த்தமா? இஸ்லாமிய வணக்கம் என்ன என்பதை நாம் முதலில் புரிந்து கொண்டால் எளிதாக இருக்கும்.

அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருநாள் 3 சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களுடைய இபாதத் எப்படி இருக்கும் என்று விசாரித்து, அவர்களில் முதல் சஹாபி, இனி நான் தூங்கவே மாட்டேன் இரவு முழுவதும் விழித்து தொழுவேன் என்றும், இரண்டாம் சஹாபி நான் திருமணமே செய்து கொள்ளமாட்டேன் என்றும், மூன்றாம் சஹாபி நான் நாள் முழுவதும் நோன்பு நோற்பேன் என்று பேசி முடிவெடுத்து கூறுகிறார்கள். இப்படி செய்து தீனை நிலைநாட்ட ஆசைப்பட்டார்கள். இதை கேட்ட நபி(ஸல்) அவர்கள், அந்த 3 சஹாபிகளிடமும் நான் உங்களைவிட இறைவனை அதிகம் அஞ்சுகிறேன் அப்படி இருந்தும் நான் திருமணம் செய்து இல்லறம் நடத்துகிறேன், சில நாட்கள் நோன்பு நோற்கிறேன் சில நாட்கள் விட்டு விடுகிறேன், நான் தொழவும் செய்கிறேன் உறங்கவும் செய்கிறேன் என கூறிவிட்டு யார் என்னுடைய வழிமுறைகளை புறக்கணிக்கிறார்களோ அவர்கள் என்னை சார்ந்தவர் அல்ல என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அஹமது, நஸயீ, புகாரி

மேற்கண்ட நபிமொழியிலிருந்து இறைவன் பார்த்து கொள்வான் என்று எந்நேரமும் தொழுவது, நோன்பு நோற்பதுதான் வணக்கம் என்று புரிந்து கொள்வது தவறு என அறியமுடிகிறது. இறைவன் மனிதர்களை படைத்தற்கான காரணத்தை மற்றொரு இடத்தில் கூறும்போது
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்-குர்ஆன் 67: 2)
மேற்கண்ட வசனத்தில் இருந்து நம்முடைய ஒவ்வொரு செயல்களும் இறைவன் கூறியபடி இருக்க வேண்டும்.

இன்று பெரும்பாலான முஸ்லிம் சமுதாய வீட்டில் இடம்பிடித்து கொண்டு இருப்பது தொலைக்காட்சி. இது வீட்டிற்கு தேவையான சாதனம்தான் என்றாலும் அது எவ்வாறு ஒரு மனிதனின் செயலை (ஒழுக்கத்தை) வீழ்ச்சி அடையச் செய்கிறது என்று நாம் அனைவரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இன்று இஸ்லாமிய இல்லங்களுக்குள் செல்லும் போது அழகான முறையில் ஸலாம் கூறி அதற்கான பதிலை செவியுற்று நுழைகின்ற நிலைமாறி எந்நேரமானாலும் திரைபடங்களும், பாடல்களின் ஒலியை கேட்டு கொண்டு நுழைகின்ற நிலைகள்தான் உள்ளது.

ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை யாரும் தவறாக பேசக்கூடாது என்று பல கட்டுப்பாடுகளை அவர்களுக்கு சொல்லி அதன்படி வெளியிலும் நடந்து கொள்ளும்படி கூறுகிறார்கள் ஆனால் சிறு குழந்தைகளின் மனதை மயக்கும் தொலைக்காட்சிகளை வீட்டினுன் வைத்து கண்டதையும் பார்த்து ரசிக்க அனுமதியளிக்கிறார்கள் இதனால் அவர்கள் பல தீயவழிகளுக்கு செல்லும் வாய்ப்புக்கள் அதிகமாகின்றன.

அபுஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எந்த தடையும் இல்லாமல் ஆதமுடைய மகன் விபச்சாரத்தின் ஒரு பங்கை அடைகிறான் அவனின் கண்கள் தீயவற்றை பார்ப்பதின் மூலமாகவும், தீயவற்றை அவனின் காதுகள் கேட்பதின் மூலமாக அவனின் மனம் அதை விரும்புகிறது அதனை உண்மைப்படுத்தும் விதமாக நடக்கின்றது. ஆதாரம்: அஹமது

ஆம்! சின்னத்திரைகளை பார்ப்பதோடு நம் மனது நின்றுவிடாது அதில் வரக்கூடிய நடிகைகளின் உள்ளங்காலில் தொடங்கி உடையலங்காரம் முதல் தலையலங்காரம் வரை பார்த்து தானும் அது போல் அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக பல வரம்புகளை மீறி அன்னிய ஆடவர்கள் முன் சென்று கொண்டு இருக்கின்றனர்.

இஸ்லாம் கூறியபடி இன்று நாங்கள் பர்தாவை கடைபிடிக்கின்றோம் என்று சிலர் அணிந்து கொண்டுதான் செல்கின்றனர் ஆனால் சத்தம் கேட்கும் கண்ணாடி வளையல், கொலுசு, நறுமணப் பொருட்களை மற்றும் மணம்மிக்க பூக்களை உபயோகித்து செல்கின்றனர். வீட்டிற்குள் கணவனின் முன் எவ்விதமான அலங்காரத்தையும் அனுமதிக்கும் இஸ்லாம் வெளியில் செல்லும் போது அவள் வைத்திருக்கும் பூவின் வாடையைகூட அன்னிய ஆடவர்களை கவரகூடாது என்கிறது. அறிவிப்பாளர்: அபுமூஸா(ரலி) அவர்கள்.

மேலும் ஒரு ஹதீஸில், நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு கூட்டத்தை கடந்து ஒரு பெண்மனி செல்கிறாள், அவளின் நறுமணம் அவர்களை கவரும் அதனால் அவள் விபச்சாரிக்கு சமமாவாள். ஆதாரம்: அஹமது

இன்னும் நம் பெண்கள் பர்தாவை அணிந்து தலைமுடிகள் பாதி தெரிய வெளியில் செல்கின்றனர். ஒரு முடிகூட வெளியில் தெரிய கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.

இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான் முஃமினான பெண்களுக்கு நீர்; கூறுவீராக, அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும் தங்கள் அழகலங்காரத்தில் (சாதரணமாக) வெளியில் தெரியக்கூடியதைத் தவிர வேறு எதையும் வெளிக் காட்டலாகாது (அல்-குர்ஆன் 24: 31)

மேற்கண்ட நபிமொழிகளையும், இறைவசனங்களையும் வைத்து பார்க்கும் போது நம் எண்ணஓட்டத்தில் நேரடியாக எந்த தவறுகளை செய்யாமல் இருந்தாலும் சிறு சிறு செயல்களில் வரம்பு மீறுவதால் மறுமையில் பெரும்பாவங்களுக்கு சமமான நிலைக்கு நிற்க நேரிடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவேளை இந்த செயல்கள் அனைத்தும் இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாத பெயர்தாங்கி இஸ்லாமியர்களிடம் இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை ஆனால், இஸ்லாத்தை பற்றி தெரிந்து ஐந்து நேர தொழுகை போன்ற இன்னபிற கடமைகளை செய்து கொண்டே அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் கைவிட்டு விடுகின்றனர். (1)

தன் மனதை பின்பற்றுபவனை பார்த்து இறைவன் கூறுகிறான் நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது – இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் – ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக. (அல்-குர்ஆன் 7: 176)

இறைவன் கொடுத்த அருட்கொடையான நேரங்களில் அவன் கூறியபடி அனுமதிக்கப்பட்ட வழியில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அதாவது வணக்கம், கொடுக்கல்-வாங்கல் இன்னபிற காரியங்கள் என்று 24 மணி நேரமும் அல்லாஹ்வும், அவன் தூதரும் சொன்ன முறையில் செலவிட்டால்தான் இறைவன் கூறிய வணக்கம் மற்றும் அவன் படைத்ததின் நோக்கத்தை நம்மால் நிறைவேற்ற முடியும். ஐந்து நேர தொழுகையில் ஒரு நேரத்திற்காக ஒதுக்கும் அரை மணி நேரம் மட்டும் இறைவனை வணங்கிவிட்டு மற்ற நேரங்களில் ஒழுக்கம் இல்லாமல் தன் மனம் போன போக்கில் வாழ்ந்தால் அவன் இறை நம்பிக்கையாளனாக ஒரு போதும் ஆக முடியாது.

பனீஇஸ்ராயீல் காலத்தில் நடந்த ஒரு சம்பவம். 3 பேர் பிரயாணம் செய்கிறார்கள் போகும் வழியில் மழை பொழிகிறது ஒரு குகையில் ஒதுங்குகின்றார்கள் ஒரு பெரிய (பாறாங்) கல் குகையின் வாயிலை அடைத்து விடுகிறது. மூன்று பேரும் இறைவனிடம் முறையிட்டார்கள் ஒருவர் கூறினார், இறைவா! நிறைய செல்வத்தை நீ கொடுத்தாய் அச்சமயம் பார்த்து பக்கத்து வீட்டு பெண் ஏழ்மையாக இருந்தால் நான் அந்த ஏழ்மையை பயன்படுத்தி என் ஆசைக்கு இணங்க கேட்டேன் ஒரு சமயம் அவளுக்கு இக்கட்டான கஷ்டம் வந்தபோது (பணத் தேவைக்கு) அவளே என்னிடம் வந்தாள் நான் அவளை நெருங்கும் போது நீ இறைவனை அஞ்சிக்கொள் என்று கூறினால் உடனே விலகினேன் என்று அவர் செய்த நற்செயலை கூறி பிராத்தனை செய்தார் பாறை கொஞ்சம் விலகியது.

இரண்டாமவர், இறைவா! என்னிடம் ஒரு நபர் வேலைக்கு வந்தார் சில காலம் வேலை செய்துவிட்டு கூலி வாங்காமல் போய்விட்டார், அந்த கூலி தொகையை மூலதனமாக கொண்டு ஆட்டு மந்தை உருவானது, பிறகு அந்த நபர் வந்து கூலி கேட்டார் நான் அந்த ஆட்டு மந்தையை அவருக்கு கொடுத்தேன் என்று கூறி பிராத்தனை செய்தார் அப்போது கல் கொஞ்சம் விலகியது, முன்றாமவர், என் இறைவா! எனக்கு வயதான பெற்றோர் இருந்தார்கள் அவர்களுக்கு உணவு கொடுத்துதான் நான் சாப்பிடுவது என் வழக்கம் ஒரு நாள் நான் பால் கறந்து வருவதற்குள் அவர்கள் இருவரும் தூங்கிவிட்டார்கள் அவர்கள் விடிந்து விழிக்கும் வரை அவர்கள் பக்கத்தில் அமர்ந்து இருந்து அப்பாலை கொடுத்து பிறகு நான் பருகினேன் என்று கூறி பிராத்தித்தார் அப்பொழுது அப்பாறை முழுமையாக விலகியது.

மேற்கண்ட சம்பவத்திலிருந்து நாம் படிப்பினை பெறுவது என்னவென்றால் அவரவர்கள் செய்த ஒவ்வொரு நற்செயலையும் அல்லாஹ்விடம் பிராத்தனை செய்து சிக்கலில் இருந்து விடுதலை பெற்றார்கள். அவ்வாறாக நாமும் நமக்கு பிரச்சினைகளை ஏற்படுகின்ற நேரத்தில் நம்முடைய நல்லமல்களை எடுத்துச் சொல்லி அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ் நிச்சயம் உதவி செய்வான். ஆனால் நம் சமுதாய மக்களோ, ஒரு பக்கம் ஒழுக்கம் இல்லாமல் அலைகின்றனர், மறுபக்கம் மூடநம்பிக்கையில் விழுந்து தன்னைத்தானே அழித்துக் கொள்கின்றனர்

உனக்கே நாங்கள் அடிபணிகிறோம் உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம் என்று தினமும் 5 வேளை தொழுகையில் ஓதி கொண்டு தனக்கு ஏதாவது கஷ்டமோ, நோயோ வந்தாலும் மற்றும் சந்தோஷம் தரக்கூடிய நிகழ்வுகள் அதாவது திருமணம் இதுபோன்றவை நடந்தால் பால்கிதாப் மற்றும் ஜோஸியம் பார்க்கக் கூடியவர்கள் நம் சமுதாயதிலும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதை எண்ணும்பொழுது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. நறுமணத்திற்காக பத்தி பற்ற வைக்கக்கூடிய வழக்கம் மாறி, இந்த பத்தி பற்ற வைப்பதுகூட ஒரு வணக்கம் என்ற நிலைக்கு தள்ளிவிட்டார்கள், இந்த பலகீனத்தை பயன்படுத்தி சில மனிதர்கள் தங்களிடம் வந்தால் செய்வினை எடுத்துத் தரப்படும் என்றும் நோய் தீர்க்கப்படும் என்றும் நள்ளிரவுகளில் பெண்களோடு இருந்து கூத்தடித்துக் கொண்டிருப்பதை நம் சமுதாயத்திலும் மெல்ல தலைகாட்டுவதை பத்திரிக்கைகள் மூலமாக அறிய முடிகிறது.

மூடநம்பிக்கையில் மூழ்கியவர்களோ அம்மனிதர்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்கள் என்று தங்கள் செல்வத்தை அவர்களிடம் வாரி வழங்கி ஏழ்மையாகின்றனர் மற்றொருபுரம் தங்கள் மன அமைதியை இழந்து மனநோய்க்கு ஆளாகின்றான் இறுதியில் அவனுக்கு பேய் பிடித்து விட்டது என்று இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை கூறி அவனை அழித்து விடுகின்றனர் மூட நம்பிக்கையுள்ளவர்களை பார்த்து இறைவன் கூறுகிறான்.

எவர்கள் அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தனது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக்கொண்டோரும் நஷ்டம் அடைந்தனர், வழி கெட்டனர், நேர் வழி பெறவில்லை (அல்-குர்அன் 6: 140)

உலகில் மற்ற மதங்களில் சொல்லும் கலாச்சாரங்களை விட இஸ்லாம் ஒரு மனிதனுக்கு உயர்ந்த கலாச்சாரங்களை கூறி நீ அதன்படி வாழ வேண்டும் இல்லையென்றால் உனக்கு இரண்டு உலகிலும் அதற்கான தண்டனையுண்டு என்று கண்டித்து கூறுகிறது ஒவ்வொரு மனிதனும் ஒழுக்கத்துடன் வாழத்தான் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையை திறந்த புத்தகமாக உள்ளது.

நபி(ஸல்) அவர்களை பார்த்து இறைவன் தன் திருமறையில் கூறுகிறான். இன்னும் (நபியே) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை, ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் (அல்-குர்ஆன் 34: 28)

மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின்பால் நீர் கொண்டு வருவதற்காக இவ்வேதத்தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம் (அல்-குர்ஆன் 14: 1)

ஆகவே! என் இஸ்லாமிய சமுதாய சகோதர, சகோதரிகளே ஒரு மனிதனுக்கு தொழுகை அவசியம், நோன்பு அவசியம், ஜக்காத் அவசியம் இதை மட்டும் செய்தால் இறைவனிடம் ஈடேற்றம் பெற்றிட முடியாது ஒரு மனிதனின் வாழ்வில் இறைவன் வகுத்து கொடுத்தளவு அவனுக்கு பயந்து ஒவ்வொரு விஷயத்திலும் மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்து அற்பமான விஷயங்களால் கவர்ந்து இழுக்கும் தன் மனதை அவற்றிக்கு மயங்கவிடாமல் ஒழுக்கத்தில் உயர்வாய் வாழ்ந்து நாமும் சுவர்க்கம் செல்ல வேண்டும், பிறரையும் அழைத்து செல்ல வேண்டும் என்ற இலட்சியத்தோடு இருங்கள்.

இறைவன் கூறுகிறான். மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;. வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்;. எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்-குர்ஆன் 3: 110)

இவ்வசனத்தின்படி நாம் நம்முடைய செயல்களில் அழகானவர்களாக இருந்தால் இந்த உலகமே நம்மை திரும்பி பார்க்கும் அதில் ஒவ்வொரு மனிதனும் ஒழுக்கத்தோடு வாழ நம்மிடையே அழகிய முன்னோடிகளை இறைவன் காட்டி தருவான் இறைவன் நம்மை படைத்த நோக்கத்தை நாம் சரியாக புரிந்து அதன்படி வாழ்ந்து சுவர்க்கத்தை நாம் அடைய இறைவன் வழிகாட்டுவானாக!

Leave a Reply

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்