ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

– தொகுப்பு உம்மு அஸ்லம்

இன்றைய காலகட்டத்தில் செல்போன் உபயோகம் என்பது ஒரு இன்றியமையாத தொலைத்தொடர்பு தகவல் சாதனம் ஆகும். இதன் அடிப்படையான நன்மை என்னவென்றால் உலகத்தின் எந்த மூலையில் இருந்ததாலும் யாரையும் உடனடியாக தொடர்பு கொள்ளலாம். ஆக இன்றைக்கு பலருக்கும் செல்போன் அவர்களது உடம்பின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. செல்போன் இல்லாமல் ஒருநாளை ஓட்டுவதை அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

தற்போது செல்போன் எல்லா இடங்களிலும் காணப்படும் ஒன்றாக ஆகிவிட்டது, ஒன்றிற்கும் மேற்பட்ட செல்போன் வைத்திருப்பவர்களும் அதிகரித்து வருகின்றனர்.  இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட சந்தை ஆய்வு நிறுவனமான சைனோவேட் இன்று வாழ்க்கைக்கான ஹரிமோட் கண்ட்ரோலாக’செல்போன் உள்ளது என்று தெரிவித்துள்ளது. செல்போன்கள் அவற்றின் பிரதான உபயோகமான பேசுவது, குறுந்தகவல் அனுப்புவது தவிர, அதிகமாக பயன்படுத்தபடுவது அலாரம் வைக்க, படம் பிடிக்க மற்றும் ஹகேம்ஸ்’விளையாட ஆகும்.

மின்னஞ்சல் மற்றும் இணைய வசதியை பொறுத்தவரை 17 சதவீதம் பேர் தங்கள் செல்போன்களில் அதை பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர். செல்போனால் நன்மையும்  உண்டு தீமையும் உண்டு. ஆம்,  அதை பயன்படுத்துவரை பொருத்தது தான்.

பாசத்தில் இன்றைய பெற்றோர்கள் செய்கின்ற தவறு, தங்களின் முழுமையாக பக்குவம் அடையாத  பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும் அல்லது ஊக்கபடுத்துவதாக கூறி அன்பளிப்பு செய்கிறார்கள். இது பிள்ளைகளின் படிப்பைப் பாழாக்குவதன் காரணத்தால் தான் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் பாட நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை செய்துள்ளனர். செல்போன்களால் படிப்பு பாழாகின்றது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.

செல்போன்கள் இவ்வாறு படிப்பை மட்டும் பாழாக்கவில்லை. அவர்களுடைய ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக்கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன. தற்பொழுது இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்களின் பட்டியலில் சிலவற்றை ஆராய்வோம். நீலப்படங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். அவை செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பரிமாறவும் படுகின்றன. அழகான மாணவிகள் அவ்வப்போது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ படம் எடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பல மாணவர்களின் பார்வைக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன.

எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற ஆபாச பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்கு செல்போன் துணை புரிகின்றன.

‘விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான், அதை அவன் அடைந்தே தீருவான், கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும், நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும், மனம் ஏங்குகின்றது, இச்சை கொள்கின்றது, பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது, அல்லது பொய்யாக்குகிறது’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243.

இந்த ஹதீஸில் வருகின்ற கடைசிக் கட்ட விஷயத்தைத் தவிர அனைத்து விஷயங்களும் செல்போன்கள் வழியாக நடக்கின்றன.

கடைசிக் கட்டத்தை அடைய வேண்டும் என்று அவர்கள் உறுதி கொள்ளும் போது, ஓடிப் போக ஆரம்பிக்கிறார்கள். அப்போது நாம் கைசேதப்பட்டுப் பயனில்லை. செல்போன் இல்லாவிட்டாலும் பள்ளி செல்கின்ற ஆண், பெண் பிள்ளைகளின் அனைத்து நடவடிக்கைகளின் மீதும் முழுக் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் கீழ்க்கண்ட ஹதீஸின்படி அல்லாஹ்விடத்தில் நாம் பதில் சொல்லாமல் தப்ப முடியாது.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள், தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள், தலைவர் பொறுப்பாளியாவார், அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் மகன் தன் குடும்பத்திற்கு பொறுப்பாளியாவான், தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டிற்கு பொறுப்பாளியாவாள், அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான், அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள், நூல்: புகாரி 893.

உங்கள் பொறுப்பில் உள்ள பிள்ளைகளின் அனைத்து நடவடிக்கைகளின் மீதும் முழுக் கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் நடத்தையும் பக்குவத்தையும் அறிந்தவர்கள் பெற்றோர்கள். ஆக, செல்லப் பிள்ளைக்கு ஒரு செல்போன் தேவையா? என்பதை பெற்றோர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

 

Leave a Reply

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்