ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

– அபூ சாராஹ் : 

தவ்பாவின் மூலம் ஒரு மனிதன் ஈருலக வெற்றியையும் பெறலாம்.  தவ்பா செய்வதனால் பல் வேறுபட்ட நலன்களும் கிடைக்கப்பெறுகின்றன என குர்ஆன் குறிப்பிடுகின்றது!. “தவ்பா”  தொடர்புடைய குர்ஆன் மற்றும் ஹதீஸ் பின்வருமாறு:  “மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்” (24:31).

“ஆனால், எவர் தவ்பா செய்து நன்னம்பிக்கை கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சித்தியடைந்தோரில் ஆகுவார்கள்” (28:67).

உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தன்னுடைய ஒட்டகத்தை (எதிர்பாராதவிதமாக)க் கண்டுபிடிக்கும்போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா – பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)

 தவ்பா நிறைவேறவும், அதன் பயன்களைப் பெறவும் சில அடிப்படையான நிபந்தனைகள் இருக்கின்றன.

தவறை அல்லாஹ்வுக்காக விடுதல்: தான் செய்த தவறை விட்டும் ஒதுங்கிய ஒருவனால் மட்டுமே தவ்பாச் செய்ய முடியும். குறித்த தவறைச் செய்துகொண்டே நான் தவ்பா செய்கின்றேன் எனக் கூற முடியாது. அதேவேளை, தவறை அல்லாஹ்வுக்காக விடவேண்டும் என்பதும் கவனத்திற்குரியதாகும்.

செய்த தவறுக்காக வருந்துதல்: தான் செய்த தவறு குறித்து வருத்தம் ஏற்பட வேண்டும். அந்த வருத்தமும் அல்லாஹ்வுக்காக ஏற்பட வேண்டும். நான் என் இரட்சகனுக்கு மாறு செய்து விட்டேனே! இப்படி செய்திருக்கக் கூடாதே என்றெல்லாம் வருத்தம் ஏற்பட வேண்டும். “தவ்பா என்பதே (செய்த தவறைக் குறித்து) கவலை கொள்வதே என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” (இப்னு மாஜா). 

இந்தத் தவறை இனிச் செய்வதில்லை என்று உறுதி கொள்ளல்: தான் செய்த தவறை மீண்டும் செய்வதில்லை என்று உறுதிகொள்ள வேண்டும். ஏதேனும் பலவீனத்தால் அதே தவறை மீண்டும் செய்துவிட்டால் அவர் தவ்பாவைப் புதுப்பித்து தன்னைத் திருத்திக்கொள்ளவேண்டும். 

மரணத்தறுவாய் வரை தாமதிக்காதிருத்தல்: சிலர் கடைசி நேரத்தில் தவ்பா செய்து கொள்ளலாம் என எண்ணலாம். இது சாத்தியப்படுமா என்பது ஒரு பிரச்சினை; அடுத்து ஸகராத் ஹாலில் தவ்பா செய்தால் அது அங்கீகரிக்கப்படாது என்பது கவனிக்கத்தக்கதாகும். “இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்” (4:18).
“தொண்டைக் குழியில் உயிர் ஊசலாடாதவரையில் அடியானிடமிருந்து தவ்பாவை அல்லாஹ் அங்கீகரிக்கின்றான் என நபி (ஸல்) கூறியுள்ளார்கள்” (திர்மிதி).
எனவே, அந்த நிலைக்கு முன்னரே ஒவ்வொருவரும் தவ்பா செய்து கொள்ளவேண்டும். 

சூரியன் மேற்கில் உதிக்கும் முன்னர்: உலக அழிவின் பெரிய அடையாளங்களில் சூரியன் மேற்கில் உதிப்பதும் ஒன்றாகும். இந்த அடையாளம் நிகழ்ந்த பின்னர் செய்யப்படும் தவ்பா பயனளிக்காது.“யார் சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு முன்னர் தவ்பா செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் மன்னிப்பளிப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

உரியவரிடம் மன்னிப்புக் கோரல்: இவை பொதுவாக எல்லாவகை பாவங்களும் மன்னிக்கப்படுவதற்கான நிபந்தனைகளாகும். ஆனால், புரியப்பட்ட குற்றம் அல்லாஹ்வுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தால் இந்த நிபந்தனைகளே போதுமானதாகும். ஆனால், மற்ற மனிதர்களுக்குப் புரிந்த குற்றத்தை குறித்த பாதிக்கப்பட்ட நபரின் மன்னிப்பின் பின்பே அல்லாஹ் மன்னிப்பான். இந்த வகையில் மனி தன் மனிதனுக்குச் செய்த குற்றமாக இருந்தால் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்புக்கோர வேண்டும். அடுத்தவருக்கு அநீதியிழைத்திருந்தால் அதற்குப் பரிகாரம் காணவேண்டும். பொருட்களை அபகரித்திருந்தால் அதனை உரியவரிடம் திருப்பிக்கொடுக்க வேண்டும். இது சாத்தியம் இல்லையெனில் அதிகமதிகம் பாவமன்னிப்புக் கோரி, புரிந்த குற்றத்திற்குப்பரிகாரம் காணும் விதத்தில் நல்லறங்களை அதிகரிக்க வேண்டும்.

எனவே, உரிய முறையில் தவ்பா செய்து உயரிய பயனை அடைய முயற்சிப்போமாக!

Leave a Reply

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்