ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

– உமைஸம்மா

ஆரம்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் என்று தொடங்கிய வாழ்க்கை, நாளடைவில்  அந்த பிள்ளைகளுக்கு திருமணமாகி பேரன், பேத்திகள் பிறந்து இப்படியே நமது வம்சமும் பெருகிக்கொண்டே செல்கிறது. முதலில் கூட்டுக்குடும்பத்தில் இருந்தவர்கள் பிரிந்து தனிக்குடித்தனமாகி சென்று விடுகிறார்கள். இப்படி நம் குடும்பத்தின் கிளைகள் விரிந்து கொண்டே செல்கின்றன. நம்முடைய வம்சாவழியும் நீண்டு கொண்டே இருக்கிறது. இவர்களைத்தான்  உறவினர்கள் என்று நாம் சொல்கிறோம். இப்படிப்பட்ட உறவினர்களுடன் ஒட்டி வாழ்வது எப்படி,வாழவேண்டுமென்று நமக்கு அழகான முறையில் இஸ்லாம் கற்றுத்தருகிறது. அதைப்பற்றி அல்குர்ஆனும், நபிமொழிகளும் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

ஆரம்பத்தில் அல்லாஹுதஆலா படைப்புகளை எல்லாம் படைத்து முடித்துவிட்டு, இரத்த பந்தத்திடம்(உறவிடம்) சொல்கிறான் உன்னை சேர்த்து கொள்பவரை நான் சேர்த்துக் கொள்வேன், உன்னை துண்டிப்பவரை நான் துண்டித்து விடுவேன் என்று கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) புகாரி, முஸ்லிம்

இந்த நபிமொழியிலிருந்து உறவினர்களுடன் நாம் சேர்ந்திருப்பதின் அவசியம் தெரியவருகிறது. அவர்களுடன் நாம் எந்த அளவு  நெருக்கமாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு இறைவனும் நம்முடன் நெருக்கமாக இருப்பான்.

இன்று நாம் நம்முடைய பொருளாதாரம் முன்னேறுவதற்கும் நீடித்த ஆயுளை பெற வேண்டும் என்பதற்கும் தினந்தோறும் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் இறைவனின் தூதர்(ஸல்) என்ன கூறியிருக்கிறார்கள் என்றால்

யார் ரிஸ்கிலும்(பொருளாதாரம்) ஆயுளும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாரோ அவர் தம் உறவினருடன் ஒட்டி வாழட்டும்  அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) புகாரி, முஸ்லிம்

ஆனால் நம்மிடையே சில உறவினர்கள் இருக்கிறார்கள். நாம் எது செய்தாலும் திருப்தி அடைந்து கொள்ளமாட்டார்கள் எல்லாவற்றிலும் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள் ஏதாவது பொருள் கொடுத்து உதவி செய்தாலும் அதிலும் மற்றவருக்கு அதிகம் கொடுத்தாய், எனக்கு குறைவாக கொடுத்திருக்கிறாய், எனக்கென்று பார்த்து இவ்வளவு விலை குறைவானதை வாங்கிக் கொண்டு வந்தாயோ! என்று குறை கூறுவார்கள். இப்படிப்பட்ட இந்த உறவினர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று கேள்வி எழலாம்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சில உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்களை நான் சேர்த்துக் கொள்கிறேன் (ஆனால்) அவர்கள் என்னை துண்டித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்மை செய்கிறேன் (ஆனால்) அவர்கள் எனக்கு தீங்கு செய்கிறார்கள் அவர்களை நான் பொறுத்துக் கொள்கிறேன்; (ஆனால்) அவர்கள் என்னை கண்டு கொள்வதேயில்லை என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீர் கூறுவதைப்போல் இருந்தால் நீர் அவர்களை சுடு சாம்பலை உண்ண வைத்தவர் போலாவீர், இந்த பண்புகளுடன் நீர் இருக்கும் காலமெல்லாம் உமக்கு உதவுபவர் (மலக்கு) அல்லாஹ்வின் புறத்திலிருந்து உம்முடன் இருப்பார் என நபி(ஸல்) அவர்கள் பதிலுரைத்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ஆதாரம் முஸ்லிம்

ஆகவே இந்த நபிமொழியிலிருந்து நம்முடைய உறவினர்கள் எப்படிபட்டவராய் இருந்தாலும் நாம் அவர்களுடன் நேசத்துடன் நடந்து கொள்வது நமது தலையாயக் கடமை என்பது தெளிவாகிறது.

அடிக்கடி நம் உறவினர்களை சந்திப்பது, அவர்களின் சுக, துக்கங்களில் பங்கு கொள்வது, நம்மிடையே இருக்கும் ஏழை உறவினர்களுக்கு உதவி செய்தல், அவர்களின் பிள்ளைகளை படிக்க வைக்க பொருளாதார உதவி செய்தல் போன்ற எத்தனையோ விஷயங்கள் நம்முடைய உறவுகளை பலப்படுத்த உதவும்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் ஏழைக்கு தர்மம் செய்வது ஒன்றேயாகும் (ஒரு நன்மை) ஆனால் உறவினர்களுக்கு உதவி செய்வது (ஆதரிப்பது) இரண்டு (நன்மைகள்) ஆகும். அறிவிப்பவர்: சுலைமான் இப்னு ஆமிர்

இறைவன் இதைப்பற்றி தன் திருமறையில் கூறும்போது உறவினர்களுக்கு அவர்களுடைய உரிமையை கொடுத்து விடுவீராக! மேலும் ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவர் உரிமையை கொடுத்து விடுவீராக) அல்லாஹ்வின் திருப்தியை பெற விரும்புவோருக்கு இதுவே மிகச்சிறந்த வழிமுறையாகும், அவர்கள் தான் வெற்றியாளர்கள்.(அல்குர்ஆன் 30: 38)

உறவினர்களுடன் ஒட்டி வாழ்ந்து நாம் வெற்றியாளர்களாக வாழ அல்லாஹ் உதவி புரிவானாக!.

இன்றைய சமுதாய சூழலில் நற்பண்புகள், நல்லொழுக்கம் ஆகியவையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு மனிதனின் வாழ்க்கை தரத்தை பணம் ஒன்றை மட்டும் கொண்டு நிர்ணயிக்கக் காண்கிறோம். தனி மனிதனிடம் மட்டுமல்லாமல் குடும்ப உறவுகளிலும் பணம் ஒரு பலம்வாய்ந்த இணைப்புச் சங்கிலியாக வடிவெடுத்துள்ளது. நெருங்கிய ஏழை சுற்றத்தாரை பணக்காரர்களில் பெரும்பாலானோர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை. அது மட்டுமின்றி அப்படிப்பட்ட ஏழை எளிய, சொந்த, பந்தங்களுடன் உறவு பாராட்டினால் அவர்கள் அடிக்கடி வந்து தங்கள் தேவைகளுக்காக உதவி கோரிவிடகூடும் என்று செல்வந்தர்கள் பயப்படுகிறார்கள்.

வம்சாவழியிலோ, இரத்த சம்பந்தப்பட்ட தொடர்பிலோ எந்த இணைப்பும் இல்லாதவர்கள் அனைவரும் பணம், என்ற ஒரு காரணியை வைத்துக் கொண்டு பணக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவதை நாம் இன்று காண்கிறோம். இவர்கள் தம் வீட்டு விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கூட பணக்காரர்களையே விழுந்து, விழுந்து உபசரிக்கிறார்கள். தம் நெருங்கிய உறவினர்களை அவர்கள் ஏழைகள் என்ற ஒரே காரணத்திற்காக இது போன்ற நிகழ்ச்சிகளில் கண்டு கொள்ளாமல் இருந்து விடுகின்றனர்.

நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும் உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான். அன்றியும் மானக்கோடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமம் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகிறான்.(அல்குர்ஆன் 16: 90)

இந்த வசனத்தில் இறைவன் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லும்போது பொதுவாக பாவங்கள், அக்கிரமங்கள் என்று கூறியுள்ளான். குறிப்பிட்ட இன்ன தவறுகள் என்று சொல்லவில்லை. அதேபோல் இதை செய்யுங்கள் என ஏவும்போது நீதி செலுத்துங்கள், நன்மை செய்யுங்கள் என்று பொதுவாக கூறிவிட்டு, உறவினருக்கு கொடுப்பதை மட்டும் குறிப்பிட்டு கூறுகிறான். இவ்வசனத்திலிருந்து. உறவினர்களுக்கு செய்யும் உதவியின் முக்கியத்துவம் தெள்ளத் தெளிவாக நமக்கு தெரிய வருகிறது.

அதே போல் எதை செலவு செய்வது, யாருக்கு செய்வது என்ற கேள்விகளுக்கும் பின்வரும் குர்ஆன் வசனங்கள் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; ”எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று நீர் கூறும் ”(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்) மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.” (அல்குர்ஆன் 2: 215)

இவ்வசனத்திலிருந்து பெற்றோருக்கு செலவிட்டு விட்டு அதற்கு அடுத்தபடியாக நெருங்கிய உறவுகளுக்கு செலவிடுவதை அல்லாஹ் ஏவகிறான். மேலும் மற்றொரு இறைவசனத்தில்

(நபியே! ”தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; ”(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 2: 219)

நம்மால் நம் உறவினருக்கு அதிகப்படியாக கொடுத்து உதவி செய்ய முடியாவிட்டாலும் அவர்களுக்கு கடன் கொடுத்து உதவி செய்யலாம். இப்படி பல வழிகளிலும் நம் உறவுகளை ஆதரித்து இம்மையிலும் மறுமையிலும் நற்பேறுகளை பெற இறைவன் நமக்கு உதவி புரியட்டும்.

இறைவன் கூறுகிறான், எவர் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கப் பூங்காவனங்களில் இருப்பார்கள்; அவர்கள் விரும்பியது அவர்களுடைய இறைவனிடம் கிடைக்கும். அதுவே பெரும் பாக்கியமாகும். (அல்குர்ஆன் 40: 22)

(ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும்) (நபியே!) நீர் கூறும் ”உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!” (அல்குர்ஆன் 40: 23)

நினைத்ததெல்லாம் நிறைவேறும் சுவர்க்கப் பூங்காவினை நமக்கு கொடுக்க இறைவன் இந்த எளிதான உறவினரிடம் அன்பு காட்டும் நல்லமலை நாம் செய்து ஜன்னத்துல் ஃபிர்ளெதஸை அடைவோமாக.

2 Responses to “உறவுகளை பேணுதல்”

  1. Mumtaj says:

    Good subject with reliable sources for everyone

  2. A.Mohideen Abdul Khader. says:

    Uraugalai penudhal a good article for the people who knowingly or uknlnowingly
    neglect their parents and spending money to others.Every one should read this
    article and should know what islam says about maintaining relations.

Leave a Reply

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்